திருச்சி
முசிறி அருகில் உள்ள வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் (ஐஸ்வர்ய
மகாலக்ஷ்மி) நாளைய தினம் 22ம் தேதி வெள்ளிக்கிழமை அஷ்டபந்தன மகா
கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
திருச்சியில்
இருந்து நாமக்கல் செல்லும் வழியில் உள்ளது குணசீலம். குணசீலத்தில் இருந்து
முசிறி செல்லும் வழியில் அமைந்துள்ளது வெள்ளூர் கிராமம். இங்கே சுமார் 800
வருடங்கள் பழைமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. சுவாமியின் திருநாமம்
திருக்காமேஸ்வரர். அம்பாளின் திருநாமம் சிவகாமசுந்தரி.
புராணப் புராதனப் பெருமைகள் கொண்ட புண்ணிய பூமி என்று சொல்லிச் சிலாகிக்கிறது ஸ்தலபுராணம்.
மகாலக்ஷ்மி
வில்வமரமாகத் தோன்றி, சிவலிங்கத் திருமேனியில் வில்வ மழையாகப் பொழிந்து
பூஜித்தாள். இதனால் மகிழ்ந்த சிவனார், மகாலக்ஷ்மிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை
இந்தத் தலத்தில் வழங்கினார் என்று விவரிக்கிறது ஸ்தல புராணம்.
மகாவிஷ்ணுவுக்கும்
மகாலக்ஷ்மிக்கும் நடுவே ஊடல். அதைத் தீர்த்துவைத்தது மட்டுமின்றி,
மகாலக்ஷ்மியை, ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் சாளக்ராமமாகச் செய்தருளிய சிவனார்,
மகாவிஷ்ணுவின் இதயத்தில் ஸ்தாபனம் செய்த தலம் இது என்றும் இங்கு வந்து
தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர்
என்பது ஐதீகம்.
இங்கே, சிவனாருக்கும்
அம்பாளுக்கும் தனித்தனி சந்நிதி அமைந்திருக்கும் அதேவேளையில், ஐஸ்வர்ய
மகாலக்ஷ்மிக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது.
இறந்த
மன்மதனுக்காக அவன் மனைவி ரதிதேவி தவமிருந்து மன்றாடினாள். அதையடுத்து,
மன்மதனின் இழந்த உடலை மீண்டும் உயிருடன் வழங்கிய திருத்தலம் இது
என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மகாலக்ஷ்மி,
குபேரன், சுக்கிரன், ஆதிசேஷன், சூரியன், முசுகுந்த சக்கரவர்த்தி, ராவணன்
மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இன்றைக்கும் சூட்சும ரூபமாக
திருக்காமேஸ்வரரை வந்து வழிபட்டுச் செல்கிறார்கள் என்பது ஐதீகம்.
போகர்
சித்தரால், பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபோகச் சக்கர விதானம் அமையப்பட்ட
வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் நீண்டகாலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல்
இருந்தது. பிறகு ஏராளமான அன்பர்களின் உதவியாலும் இந்து சமய அறநிலையத்
துறையின் முயற்சியாலும் திருப்பணிகள் செய்யப்பட்டு, புனரமைப்புப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு, இப்போது மகா கும்பாபிஷேகமானது நாளை 22ம் தேதி
வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
முன்னதாக, கடந்த
15.6.18 வெள்ளிக்கிழமையில் இருந்து பூஜைகள் தினமும் நடந்துவருகின்றன.
அன்று தொடங்கி தினமும் பூஜைகளும் யாகசாலை பூஜைகளும் நடந்தன. 22ம் தேதி
வெள்ளிக்கிழமை நாளைய தினம் காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நூதன
ராஜகோபுர, ஜீர்ணோத்தாரண, அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா நடக்கிறது.
இதையடுத்து,
மாலையில் திருக்கல்யாணா உத்ஸவம் நடக்கிறது. கும்பாபிஷேக பூஜைகளை
பிள்ளையார்பட்டி கோயில் பிச்சை குருக்கள் செய்து வருகிறார்.
விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர், கிராம மக்கள், ஆச்சார்யப் பெருமக்கள் ஆகியோர் செய்துவருகின்றனர்.
Credit : Kamadenu.in
No comments:
Post a Comment